திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் மறைந்த ஞானசேகரன் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு ஞானசேகரனின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், "மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி போராடிவரும் விவசாயிகள் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி லட்சக்கணக்கான டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணியை டெல்லியில் நடத்த முடிவுசெய்துள்ளனர். இந்தச் சூழ்நிலையிலாவது மோடி அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு விட்டு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
வேளாண்மை துறை சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது அது மாநில அரசுக்கான அதிகாரப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கின்ற வகையில் மோடி அரசு இந்தச் சட்டங்களை நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாடு அரசு குறைந்தப்பட்ச ஆதார விலை சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 21ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.