திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத்தோப்பு அணையில் மொத்தமுள்ள ஏழு ஷட்டர்களில் மூன்று ஷட்டர்கள் நீக்கப்பட்டு பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் ஆய்வுசெய்தனர்.
அணை பழுதுபார்க்கும் பணியை ஆய்வுசெய்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்ததாவது, "திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் செண்பகத்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணை 2007ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. அணை கட்டும்போது பொருத்தப்பட்ட ரேடியல் ஷட்டர்கள் சரியாக இயங்காததால் முழு அளவு தண்ணீரை தேக்க முடியாமல் இருந்தது.
ரேடியல் ஷட்டரை புதுப்பித்து முழு அளவு தண்ணீரை சேகரிக்க விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செண்பகத்தோப்பு அணையின் ரேடியல் ஷட்டரை புதியதாக பொருத்துவதற்கு ரூபாய் 16.37 லட்சம் ஒதுக்கீடு செய்து 2019 அக்டோபர் 15ஆம் தேதியன்று அரசாணை வெளியிட்டார்.
இதன் அடிப்படையில் பொதுப்பணித் துறையின் மூலம் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு 2020 ஜனவரி 30ஆம் தேதி முதல் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன. இப்பணி தொடங்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு முழு கொள்ளளவான 62 அடி தண்ணீர் தேக்கப்படும். இந்த அணையின் மூலம் போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு தாலுகாவில் உள்ள 48 ஏரியின் மொத்த ஆயக்கட்டு 7497 ஏக்கர் பாசன வசதி பெறும்.
அணை பழுதுபார்க்கும் பணியை ஆய்வுசெய்த அமைச்சர் மேலும் அணையின் கரை, வடிகால், சாலை, பணியாளர் குடியிருப்பு, ஆய்வு மாளிகை, அணைக்கட்டுகள், பொதுமக்களின் அடிப்படை வசதிகள், பொழுதுபோக்கு பூங்கா அமைக்க ரூ.17.61 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. அரசின் நிர்வாக ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின் மேற்கண்ட பணிகள் செய்துமுடிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் பார்க்க: ’முன்பிணை மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை’