திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கி கடந்த 10 நாள்களாக நடைபெற்றுவந்தது.
அதனைத் தொடர்ந்து நாள்தோறும் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்குச் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் இரவு சுவாமிக்குப் பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் கடைசி நாளான நேற்று (ஏப்ரல் 26) காலை சுவாமி தீர்த்தவாரியும், இரவு 7 மணியளவில் அண்ணாமலையார் கோயில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவன் கோயில்களில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மட்டுமே என்பது சிறப்புக்குரியது.
இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடைவிதித்திருப்பதால் நேற்று நடைபெற்ற மன்மத தகனம் நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.