திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குருமப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் - அனிதா தம்பதியினர் கடந்த ஐந்து ஆண்டுகளாக நீரின்றி விவசாயம் பொய்த்துப்போனதால் வாழ வழியின்றி தவித்துவந்தனர். அப்போது தம்பதியினர் இருவரும் பசுமாடுகளை வாங்கி பிழைப்பு நடத்த முடிவு செய்து வட்டிக்கு பணம் வாங்கி சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் மதிக்கத்தக்க மூன்று பசுமாடுகளை வாங்கி பால் கரந்து விற்பனை செய்து பிழைப்பு நடத்திவந்தனர். அப்போது மணிகண்டனின் பக்கத்து நிலத்து உரிமையாளரிடம் வழி சம்பந்தமாக முன்விரோதம் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பக்கத்து நிலத்து உரிமையாளர் வழி கேட்டு மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். மறுநாள் காலையில் பசுவிடம் பால் கரந்து எடுத்துக்கொண்டு ஸ்டோருக்கு சென்று பால் ஊற்றிவிட்டு வருவதற்குள் மூன்று பசுமாடுகளும் மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்த மணிகண்டனும் அவரது மனைவியும் அருகில் உள்ள கால்நடை மருத்துவரைக் கொண்டு மருத்துவம் பார்த்துள்ளனர். ஆனால் அதில் இரண்டு பசுமாடுகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளன.