'கரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படும்' - தி.மலை சிறப்பு அலுவலர்
திருவண்ணாமலை: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் பரிசோதனைகள் இரண்டு மடங்கு அதிகப்படுத்தப்படும் என சிறப்பு அலுவலர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மாவட்டக் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் தீரஜ்குமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உள்ளிட்ட அனைத்துச் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தீரஜ்குமார், “மாவட்ட நிர்வாகம் கரோனா தடுப்பு நடவடிக்கைளைத் தீவரமாக மேற்க்கொண்டு, சிறப்பாகச் செய்துவருகிறது. குறிப்பாக, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களைக் கண்டறிய பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டுவருகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் பரிசோதனைகள் இரண்டு மடங்கு அதிகப்படுத்தப்படும். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுவருகின்றன. எதிர்வரும் காலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு முன்கூட்டியே தேவையான படுக்கை வசதிகள், மருத்துவமனை வசதிகள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு நடைமுறை குறித்து சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கப்படும். ஒரு மாதத்திற்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன” என்றார்.