திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இரண்டு நகராட்சிகளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, திருவண்ணாமலை, ஆரணி நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "இதுவரையில் 806 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இன்னும் ஒருசில தினங்களில் தனியார் நர்சிங் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவ மாணவிகளைக் கொண்டு பொது மருத்துவ முகாம் நடத்த உள்ளோம். அப்போது உடல் வெப்பம் அளவிடும் கருவியைக் கொண்டு பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க உள்ளோம்.
தற்போதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீடுகளின் அருகில் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை. தற்போதைய நிலவரப்படி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 28 பேரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் 23 பேரும் மொத்தம் 51 பேர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
இன்று காலை நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு ஆக உள்ளது. இந்த ஆறு நபர்களை தனிமைப்படுத்தி தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட இவர்களின் வீடுகளில் உள்ளவர்களையும் கண்காணித்துவருகிறோம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் ஏற்படுமேயானால். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ஆயிரம் நபர்களை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கக் கூடிய தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கும் இடங்களை தற்போது தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகிறது. மாணவர்கள் விடுதிகள், திருமண மண்டபங்கள், தனியார் மற்றும் அரசு கல்லூரி விடுதிகள் போன்ற இடங்களை தேர்வு செய்து அந்த இடங்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் வைப்பதற்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து டெல்லி இஸ்லாமிய மத மாநாட்டிற்குச் சென்றவர்கள் தற்போது 28 நபர்களை கண்டறிந்து உள்ளோம். மேலும் இவர்களோடு உடன் சென்றவர்கள் ஒன்பது நபர்களை கண்டறிந்து உள்ளோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை நகராட்சியில் ஒருவர், சேத்துப்பட்டு பகுதியில் ஒருவர், சந்தவாசல் பகுதியில் 2 பேர் வந்தவாசியில் ஒருவர் வேளாந்தல் பகுதியில் 1 நப்ர் என மொத்தம் 6 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.