திருவண்ணாமலை நகரின் மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஆண்டுதோறும் ரமலான் திருநாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.
தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் தகுந்த இடைவெளி, முகக் கவசம் அணியவேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
திருவண்ணாமலையில் இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளான ரமலான் புனித திருநாளை முன்னிட்டு, ஈத்கா மைதானத்தில் 10 ஆயிரம் பேர் கூடுவதற்கு பதிலாக 10 பேர் மட்டும் வந்து தொழுகையில் ஈடுபட்டனர். மேலும், காவல் துறையினரும் அங்கு இஸ்லாமியர்கள் அதிகளவில் கூடாதவாறு தீவிர பாதுகாப்பில் இருந்தனர்.
கரோனா வைரஸ் தாக்கம் முற்றிலும் குறைந்து அடுத்த ஆண்டு ஈகை திருநாளில் இஸ்லாமிய மக்கள் சிறப்பான முறையில் தொழுகை நடத்தி ரமலானை எப்போதும் போல் கொண்டாட, எல்லாம் வல்ல இறைவன் வழிவகுப்பார் என்று தொழுகைக்கு வந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தகுந்த இடைவெளியுடன் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்!