உலகை அச்சுறுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் அதன் தாக்கம் இரண்டாம் கட்ட அபாய நிலையை அடைந்துள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றுநோயால் இரண்டாயிரத்து 168 பேரு பாதிக்கப்பட்டும், 27 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசால், தமிழ்நாட்டில் 32 மண்டலங்கள் சிவப்பு குறியீட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்தப் பணிகளில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாகச் செயலாற்றிவருகின்றன.
காவல் துறை, கல்வித் துறை, பொதுப்பணித் துறை, ஊரக உள்ளாட்சித் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் நிகழ்ச்சிகளை நடத்தவும் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் கிராம ஊராட்சிகளிலும், நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சர்வதேச தொழிலாளர் நாளான நாளை நடைபெறவிருந்த கிராமசபை கூட்டம் ரத்துசெய்யப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், ”ஒவ்வொரு ஆண்டும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
ஊரடங்கு: மே 1ஆம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து! எதிர்வரும் மே மாதம் முதல் நாள் தொழிலாளர் தினத்தை ஒட்டி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் கரோனா தீநுண்மி நோய்தொற்றினை முன்னிட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம். எது குறித்தும் விவாதிக்க வேண்டாம். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதையும் படிங்க :கோயில் கருவறையைக் கண்ட அரளி பூ! - கீழே கொட்டப்படும் அவலம்!