திருவண்ணாமலை: கரோனா தொற்றுப் பரவலின் முதல், இரண்டாம் அலையில் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பின. அப்போது இடப்பற்றாக்குறையால் கல்லூரி வளாகங்கள், பள்ளிகள் கரோனா சிறப்புச் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன.
அந்நேரம் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அவுட் சோர்சிங் முறையில், இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். செய்யாறு சுகாதார பகுதிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 54 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டது. இதில் நியமிக்கப்பட்டவர்கள் நேரடி நேர்காணல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
போலி சான்றிதழ்
இந்நிலையில் பணிக்குச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் பலருக்கு மருத்துவப்பணி தொடர்பான எந்த அடிப்படைச் செயல்பாடுகளும் தெரியாமல் இருந்துள்ளனர். மருத்துவர்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவர்கள் உயர் அலுவலர்களுக்குப் புகார் அளித்தனர். இது குறித்து அவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். மேலும் பணி நியமனத்தில் அசல் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த நபர்கள் உரிய ஆதாரங்களுடன் சென்னையில் உள்ள சுகாதாரத் துறை இயக்குநருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.