மத்திய அரசு கரோனா வைரஸ் தொற்றை பேரிடராக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கந்தசாமி தலைமையில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி துறை உட்பட பல்வேறு துறைகளின் மூலமாக பேருந்து நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட பிற வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், மாவட்ட எல்லைகள் உள்பட பல்வேறு இடங்களில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நோய்க்கான அறிகுறி உள்ள பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். கரோனா வைரஸ் குறித்து தெரிந்துகொள்ள சுகாதாரத் துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையான 104, 044 29510400 , 044 29510500 , 9444340496 , 8754448477, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை 04175 233141 ஆகிய எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.
கரோணா நடவடிக்கைகள் குறித்து பேசிய ஆட்சியர் கந்தசாமி மேலும், கரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக உணர்ந்து, முழுமையாக மேற்கொண்டு, தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பீதி: வெறிச்சோடி கிடக்கும் சுற்றுலாத் தளங்கள்!