திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(85), இவரது மனைவி சின்னம்மாள்(75). இவர்களுக்கு, காத்தரவராயன், சங்கர் என்ற இரு மகன்களும், ஜெயலஷ்மி ஜான்சிராணி, செல்வி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்துவருகிறார்கள்.
இந்நிலையில், வயதான மாணிக்கம், சுயமாக சம்பாதித்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, மாணிக்கம், சின்னம்மாள் ஆகிய இருவரின் மருத்துவச் செலவுகளைப் பார்த்துக்கொள்வதாக மகன்கள் உறுதியளித்துள்ளனர். இதனை நம்பிய மாணிக்கம், தனது மகன்கள் இருவரின் பெயரில், வீடு, 5 ஏக்கர் நிலம், கிணறு உள்ளிட்டவற்றை தான செட்டில்மென்ட்டாக எழுதிக்கொடுத்துள்ளார்.
இதையடுத்து இரண்டு பிள்ளைகளும் நிலம், வீட்டை அனுபவித்துவந்துள்ளனர். மேலும், தாய், தந்தையை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.
இதனால், கடந்த ஆறு மாதகாலமாக உணவின்றி தவித்த மாணிக்கம், சின்னம்மாள் தம்பதியினர், திருவண்ணமலை மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷை சந்தித்து, பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர்.