செங்கம் தாலுகா தண்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(40). கூலித்தொழில் செய்து வரும் இவருடைய மகன் கோவிந்தராஜுக்கு நான்கு வயது இருக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அப்போது மருத்துவர்கள்,'இதய நோயினால் கோவிந்தராஜ் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கு சிகிச்சை அளிக்க அதிக செலவாகும்' என்று தெரிவித்துள்ளார்கள்.
ஏழுமலையின் குடும்ப வறுமையின் காரணமாக கோவிந்தராஜுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யமுடியவில்லை. இந்நிலையில் ஏழுமலை தனது குடும்பத்துடன் கடந்த திங்கள் கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது நிலை குறித்து ஆட்சியரிடம் எடுத்துக்கூறி உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் கோவிந்தராஜ் அதற்கு தனியார் மருத்துவமனையில் கோவிந்தராஜுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக ஆறுதல் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். இதனையடுத்து ஆட்சியரின் நடவடிக்கையால் கோவிந்தராஜுக்கு சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்று கோவிந்தராஜுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பின்னர் தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் மேல் சிகிச்சைக்கு கோவிந்தராஜ் அவரது குடும்பத்தினருடன் வழியனுப்பி வைக்கப்பட்டார். அவர்களின் வழிச்செலவிற்காக மாவட்ட ஆட்சியர் 10ஆயிரம் ரூபாயை அவர்களுக்கு வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.