திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூர், கலசப்பாக்கம், திருவண்ணாமலை, செங்கம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச்.21) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
’ஸ்டாலினிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால் நாடு உருப்படுமா?’ - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி ஆரணியில் இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் வேட்பாளருமான சேவைக் ராமச்சந்திரனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ”அதிமுக இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடும் என ஸ்டாலின் பேசுகிறார். வந்து பாருங்கள், வரும் வழி முழுவதும் கடல் அலைபோல் கூட்டம் காணப்படுகிறது. குறுக்கு வழியில் புகுந்து முதலமைச்சரானவர் கலைஞர் கருணாநிதி. தகுதியில்லாத தலைவர் என்றால் அவர் ஸ்டாலின்தான். இந்தியாவிலேயே 100 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்த மாநிலம் தமிழ்நாடு. நலிவடைந்த தொழிலாளர்களை நிமிரச் செய்த அரசு, அதிமுக அரசு.
சட்டம், ஒழுங்கில் சிறப்பாக செயல்படுவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. நான்கு வருடம் இரண்டு மாதங்கள் மக்களின் ஆதரவோடு முதலமைச்சராக இருந்தேன். ஒரு அலுவலரைக்கூட மிரட்டியது கிடையாது. ஆனால், தற்போதே ஸ்டாலின் அலுவலர்களை மிரட்டுகிறார். அது மட்டுமல்லாமல் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் அரசு அலுவலர்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. ஸ்டாலின் போன்றோரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால் நாடு உருப்படுமா?” என மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ஸ்டாலின் ஒரு போதும் முதலமைச்சராக முடியாது. முதலமைச்சராகவே இல்லாதவர் எதற்காக மனு வாங்குகிறார்? அப்படி வாங்கினாரே, அதனை என்னிடமாவது கொண்டு வந்து கொடுத்தாரா?
1996ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. கலைஞர் உயிருடன் இருந்தபோது ஸ்டாலினால் தலைவராக முடிந்ததா? அவருடைய தந்தையே அவரை நம்பவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாத நிலையில்கூட, ஸ்டாலினை தலைவராக்கவில்லை. அப்படி இருக்கும்போது தமிழ்நாடு மக்கள் எப்படி ஸ்டாலினை நம்புவார்கள்? திமுக கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி. அவர்கள் குடும்பத்திற்கு தான் நல்லது செய்வார்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு, திமுக அரசு தான்.
மக்களே, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையை அதிமுக அரசு சிறப்பாக அமைத்திருக்கிறது. அறிவியல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. யாத்திரை நிவாஸ் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. மேலும் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு ஆரணி வருவாய் கோட்டம், மண்டல போக்குவரத்துக் கழகம் அமைக்கப்பட்டிருக்கிறது. புதிய காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டிருக்கிறது. ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.” என்றார்.
இதையும் படிங்க:மத்திய அரசுடன் இணக்கம் ஏன்? - முதலமைச்சர் விளக்கம்