திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்கா திறப்பு விழா மற்றும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர் உறுப்பினர்கள் அறிமுக விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு துணைச் சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் குழுவினர் உட்படப் பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில், அண்ணாமலையார் திருக்கோயிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் உறுப்பினர்கள் கோமதி குணசேகரன், மீனாட்சி சுந்தரம், ராஜாராம், பெருமாள் ஆகியோரை அறிமுகப்படுத்தி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றினார்.
அப்போது மேடையில் பேசிய அவர், “இந்த காலகட்டத்தில் திருக்கோயில் என்பது புனிதமானது, அதை நான் மறுக்கவில்லை என்றார். மேலும், ஆன்மீக உணர்வோடு கோயிலுக்குள் போக வேண்டும் எனவும், நாம் கோயிலுக்குள் செல்லும் போது சாமியை மட்டுமே நினைத்துக் கொண்டு தான் செல்லவேண்டும் அப்போது தான் நம் காரியம் நடக்கும் எனவும், அப்படி புகழ்பெற்று விளங்குகின்ற இத்திருத்தலத்தில் செல்போனில் வீடியோ எடுத்து கோயிலைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது தவறானது என்றும், கோயிலுக்கு வெளியே செல்போனை அணைத்தும், உள்ளே ஆன்மீக உணர்வோடும் செல்ல வேண்டும் என்றார்.