திருவண்ணாமலை: உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள வடக்கு கோபுரம் முன்பு அம்மனி அம்மன் மடம் அமைந்திருந்தது. இந்த மடத்தின் முன் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கோயில் மேம்பாடு மற்றும் ஆன்மீகப் பிரிவின் மாநில துணைத் தலைவரும், வழக்கறிஞருமான சங்கர் என்பவர், சுமார் 23 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், குறிப்பிட்ட இந்த ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்ற திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், கடந்த மார்ச் 18ஆம் தேதி பாஜக பிரமுகர் சங்கரின் வீடு மற்றும் கார் பார்க்கிங் பகுதிகளை இந்து சமய அறநிலையத்துறையினர் முன்னிலையில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அகற்றியது. தொடர்ந்து அம்மனி அம்மன் மடத்தினை அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.
இதனைத் தொடர்ந்து அதே நாள் (மார்ச் 18) மாலையில் கோயில் நிர்வாகம் சார்பில், 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பக்தர்கள் தங்கி சாமி தரிசனம் செய்யும் மடமாக இருந்து வந்த 300 ஆண்டுகள் தொன்மையான அம்மனி அம்மன் மடம் இடிக்கப்பட்டு தரை மட்டம் ஆக்கப்பட்டது. இந்த நிகழ்வினைக் கண்டித்தும், திருக்கோயில் நிர்வாகத்தினைக் கண்டித்தும் இந்து முன்னணியினர், அண்ணாமலையார் கோயிலின் வடக்கு கோபுர வாசலில் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இது தொடர்பாக பாஜக பிரமுகர் சங்கர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “இந்த மடம் தொடர்பாக அண்ணாமலையார் கோயில் தொடந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த அம்மனி அம்மன் மடம் அமைந்துள்ள இடம் தனியார் டிரஸ்டுக்கு சொந்தமானது. இந்த இடத்திற்கு மாவட்ட நிர்வாகம் அல்லது கோயில் நிர்வாகம் எப்படி சீல் வைக்க முடியும்? இதில் பிரச்னை இருந்தால், கோயில் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தினை அனுகி இருக்க வேண்டுமே ஒழிய, மடத்திற்கு சீல் வைத்தது தவறு. அப்படி சீல் வைத்த 300 ஆண்டுகள் பழமையான மடத்தினை கோயில் நிர்வகாம் இரவோடு இரவாக இடித்து தள்ளி உள்ளது.