தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாமக ஆட்சியா? திமுக ஆட்சியா?.. திமுக கிளை செயலாளர் மிரட்டுவதாக ஆசிரியை புகார் வீடியோ வைரல்! - முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

திருவண்ணாமலை தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் காலை உணவு திட்ட ஒத்திகை நிகழ்ச்சியில், பாமக ஒன்றிய கவுன்சிலர் முருகன் கலந்து கொண்டதை அடுத்து திமுக கிளை செயலாளர், தனக்கு மிரட்டல் விடுப்பதாக ஆசிரியை புகார் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

திமுக கிளை செயலாளர் ஆசிரியரை மிரட்டும் ஆடியோ வைரல்
திமுக கிளை செயலாளர் ஆசிரியரை மிரட்டும் ஆடியோ வைரல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 10:28 AM IST

திமுக கிளை செயலாளர் ஆசிரியரை மிரட்டுவதாக ஆடியோ வைரல்

திருவண்ணாமலை:தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கு இணங்க தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முன்னோட்டத்திற்காக, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் இனாம்காரியந்தல் ஊராட்சி வெங்காயவேலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒத்திகைக்காக உணவு தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாமகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஊராட்சித் துணைத் தலைவர் கங்கா குருமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை உணவுகளை வழங்கி உள்ளனர். இந்த நிகழ்ச்சியானது இளநிலை ஆசிரியர் ஜோதிலட்சுமி ஏற்பாட்டில் நடைபெற்று உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி மாலை வெங்காயவேலூர் திமுக கிளைச் செயலாளர் பன்னீர் என்பவர் இளநிலை ஆசிரியை ஜோதிலட்சுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், திமுக கிளைச் செயலாளர் பன்னீர் தன்னை தகாத வார்த்தைகளால் வசைபாடி, மிரட்டல் விடுத்ததாக ஜோதிலட்சுமியும் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அந்த ஆடியோவில் அவர், "பாமகவை அழைத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பீர்களா? சி.இ.ஓவை பார்த்து மந்திரியிடம் போட்டோவுடன் அனுப்பி உன்னை பார்த்து விடுவேன். நாளை பள்ளி திறந்தால் பசங்களை வைத்து பிரச்சினை செய்வேன். திமுக ஆட்சி நடக்கிறதா? பாமக ஆட்சி நடக்கிறதா? பள்ளியில் கட்சி நடத்துகிறீர்களா? பள்ளியில் ஒரு நாள் கூட வேலை பார்க்க முடியாது" என மிரட்டல் விடுப்பது போல் பதிவாகி உள்ளது.

பல மாநிலங்களுக்கு முன்உதாரணமாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், திமுகவினர் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மிரட்டும் போக்கு அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், அவர்களுக்கு உள்ளூர் அமைச்சர்கள் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இது போன்ற தவறுகள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் திமுக கிளைச் செயலாளர் பன்னீர் மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல் துறையினரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும், தமிழக பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில், அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு கோரி அனைத்து கட்சியினருக்கும் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் திமுக கிளைச் செயலாளர் பன்னீர் செல்வத்தின் இத்தகைய போக்கு கட்சிக்குள்ளே முரணான தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க:"சாமி வேண்டாம், பக்தி வேண்டாம் ஆனால் உண்டியல் மட்டும் வேண்டும்" - தமிழிசை காட்டம்!

ABOUT THE AUTHOR

...view details