திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கொடுங்கலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் குமார். இவர், கடந்த 24ஆம் தேதி இரவு கீழ்கொடுங்கலூர் கிராமம் அருகேயுள்ள சுகநதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்கச் சென்றார்.
அப்போது தலைமைக் காவலர் குமாரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு, மணல் கடத்தல் கும்பல் லாரியுடன் தப்பிச் சென்றது. படுகாயமடைந்த தலைமைக் காவலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி காவலரைத் தாக்கியவரை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் மதுராந்தகம் தாலுகா பசுவங்கரனை பகுதியைச் சேர்ந்த கோபிநாத், அரவிந்த் ஆகியோர் சட்ட விரோதமாக லாரியில் மணலை கடத்தியதும், அதனை ஆரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், மணல் கடத்தலைத் தடுக்க வந்த தலைமைக் காவலரை இரும்பு கம்பியால் அடித்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். தொடர்ந்து, மூவரையும் கைது செய்த காவல் துறையினர், மணல் கடத்தப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.