திருவண்ணாமலை: நடப்பாண்டுக்கான 21வது தேசிய கூட்டமைப்பு கோப்பைக்கான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஏப்ரல் 28 முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாட்கள் திருவண்ணாமலை மாவட்ட அருணை மருத்துவக் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும் இந்த ஜூனியர் தடகள விளையாட்டு போட்டிகளை திரைப்பட நடிகர் ஜீவா நேற்று திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் துவக்கி வைத்தார்.
குறிப்பாக இந்த மூன்று நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் இந்தியா முழுவதும் 28 மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறும் வீரர்கள் தகுதியின் அடிப்படையில் தென் கொரியாவில் ஜூன் மாதம் 4 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறும் ஆசிய தடகள போட்டிகளில் பங்கேற்பார்கள்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திரைப்பட நடிகர் ஜீவா பேசியது, "குறிப்பாக நான் 18 வருடங்களுக்கு முன்பு சென்னை நேரு ஸ்டேடியத்தில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு முதலில் மெதுவாக ஓட தொடங்கி இறுதி கட்டத்தில் என்னுடைய முழு முயற்சியையும், உழைப்பையும் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு ஓடியதில் முதலிடம் வந்து தங்கப் பதக்கத்தை வென்றேன்.அந்த ஒரு நிகழ்வு என்பது என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வாக நான் பார்க்கிறேன். மேலும் நான் என் திறமைகளை முழுமையாக உணர்ந்த தருணம். அந்த 400 மீட்டர் ஓட்டம் என்பது காமெடியில் ஆரம்பித்து என்னால் முடியும் என்ற நம்பிக்கையினால் வெற்றியில் முடிந்தது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிப்பு, உறுதி, ஒழுக்கம் இந்த மூன்று விஷயங்கள் இருந்தால் (ட்ரிபிள் டி) எந்த இலக்கை அடைய முடியும் என்பதை நாம் அடையலாம். என் வாழ்க்கையில் திருவண்ணாமலையில் சில படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளதாகவும், அண்ணாமலையார் கோவிலுக்கு அடிக்கடி தான் வருவதாகவும் ஆகவே திருவண்ணாமலைக்கு எனக்கும் நெருங்க தொடர்பு உண்டு" என்றும் உணர்ச்சி பொங்க கூறினார்.