அருணாச்சலேஸ்வரர் கோயில் ஊழியர்களும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகவும் விளங்கக்கூடிய அருணாச்சலேஸ்வரர் கோயிலில், நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இக்கோயிலுக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
அவ்வாறு திருவண்ணாமலை நோக்கி வருபவர்கள், 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் சுற்றி, அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், அருணாசலேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படும் பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 முதல் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோயிலில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட தினங்கள் மட்டுமின்றி, விடுமுறைக் காலங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் குவிவதால், கோயில் நிர்வாகத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இருப்பினும், பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் வசதியும், வரிசையில் செல்லும் பக்தர்கள் இளைப்பாறிக் கொள்ளும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளையும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தொடர்ச்சியாக விடுமுறை தினம் என்பதால் இன்று (டிச.25) அதிகாலை முதலே, கோயிலில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இதனால் கூட்ட நெரிசலைச் சரிசெய்யும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த கோயில் ஊழியர் ஆனந்த் என்பவருக்கும், பக்தர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதில் பக்தர் கோயில் ஊழியரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை சிறப்பு ஆய்வாளர் பிரகாஷ் என்பவர், கோயில் ஊழியர் ஆனந்தை ஒருமையில் பேசியதாகவும், தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இன்று (டிச.25) காலை முதல் சிறப்பு ஆய்வாளர் பிரகாஷ், கோயில் ஊழியர்களை பல்வேறு இடங்களில் தரக்குறைவாகப் பேசியதாகவும், ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் அவர், தனக்கு வேண்டப்பட்ட உறவினர்களையும், நண்பர்களையும் அவ்வப்போது அழைத்து வந்து, வரிசையில் நிற்க வைக்காமல் குறுக்கு வழியில் செல்வதற்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து, தற்போது கோயில் ஊழியரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறும் ஊழியர்கள், பணியில் உள்ள காவல்துறையினரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தி.மலையில் பெட்ரோல் பங்க் மேலாளருக்கு அரிவாள் வெட்டு.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி