திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, தேர் திருவிழாவை நடத்த தமிழ்நாடு அரசு, கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரி விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் வட தமிழகத் துணைத் தலைவர் வி.சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ”வழக்கமாக நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றம் நடத்தி, 17 நாட்கள் நடைபெறும். இந்த முறைப்படி தீபத்திருவிழா, தேர்த்திருவிழா நடத்த வேண்டும். இதுகுறித்து நவம்பர் 7ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது”என்றார்.
பக்தர்களை அனுமதிக்காமல் கோவில் நிகழ்வுகளை நடத்தலாம், கோவில் வளாகம் மட்டுமல்லாமல் மாட வீதிகளிலும் தேர் திருவிழாவை நடத்த உத்தரவிட வேண்டும். அரசு உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு பூரி ஜெகன்நாதர் கோவில் தேர் திருவிழா நடத்தியது போல அண்ணாமலையார் கோயில் விழாக்களையும் நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், மாவட்ட நிர்வாகம் பிற ஊர்களிலிருந்து வரும் பக்தர்களை கட்டுபடுத்தலாமே தவிர, திருவண்ணாமலையில் உள்ள உள்ளூர் மக்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் எனக் கேள்வி எழுப்பினர். மக்களை கட்டுப்படுத்துவதற்காக மனுதாரர் தரப்பு என்ன நடவடிக்கை எடுத்தது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் எல்லாவற்றையுமே காவல் துறை கட்டுப்படுத்த வேண்டுமென நினைக்க கூடாது எனச் சுட்டிக்காட்டினர்.
அரசு சார்பில் ஆஜரான பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அக்டோபர் 30ஆம் தேதி பிறப்பித்த அரசாணையில் கோயில் நடைமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால், அதன்படி கோயில் விழாவை எப்படி நடத்த வேண்டுமென கோவில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அண்ணாமலையார் கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீராம், வழக்கமாக 17 நாள்கள் விழாவில் நாளொன்றுக்கு 1 லட்சம் பேரும், தேர் திருவிழாவில் 5 லட்சம் பேரும், மகா தீபத்தன்று 20 முதல் 25 லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.