திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக உள்ள அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தெடங்கி கடந்த 10 நாட்களும் வெகு விமர்சையாக நடைபெற்றது. 26ஆம் தேதி அதிகாலை 4:00 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்த கொண்டு தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை ஐய்யங்குள தெருவில் அமைந்துள்ள ஐய்யங்குளத்தில் நேற்று இரவு சந்திர சேகரர் தெப்பல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருவார். தை மாதம் மாட்டு பொங்கல் அன்று நடைபெறும் திருவூடல் அன்று அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுடன் ஊடல் கொண்டு பிறகு மகரிஷிக்கு மட்டும் தனியாக சென்று காட்சியளிப்பார். இதனால் கோபம் கொண்ட உண்ணாமுலையம்மன் ஊடல் கொண்டு தனியாக அம்மன் கோயிலுக்கு சென்றுவிடுவார். பின்னர் அண்ணாமலையார் மட்டும் தனியாக மகரிஷிக்கு காட்சி அளித்து கிரிவலம் வருவார்.