திருவண்ணாமலை:இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் 'திருக்கார்த்திகை தீப மகாரத தேரோட்ட திருவிழா'வின் ஒரு பகுதியாக, இன்று (டிச.3) விநாயகர் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. 'நினைத்தாலே முக்தி தரும்' பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக உள்ள திருவண்ணாமலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில், திருக்கார்த்திகை தீப திருவிழாவின் 7ஆம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் நடைபெறுகிறது. அதிகாலையில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன், பராசக்தி மற்றும் சண்டிகேஷ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் மகாரத தேரினில் எழுந்தருளினர். பின்னர் விநாயகர் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் விநாயகர் தேரினை வடம் பிடித்து மாடவீதிகளில் வலம் வந்தனர்.