திருவண்ணாமலை: நவம்பர் 29ஆம் தேதி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த தீபம் ஏற்றுவதற்காக, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டது. மலை உச்சியில் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த மகா தீபம், டிச., 9ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பின்னர் தீபக் கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, அதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கொப்பரையில் சேகரிக்கப்பட்ட மகா தீப மை கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜருக்கு சாற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு விநியோகம் செய்ய, கொப்பரையில் சேகரிக்கப்பட்ட தீப மையுடன், பல்வேறு மூலிகைகள், சுவாமி அபிஷேக விபூதி, வாசனை பொருள்கள் போன்றவை சேர்த்து, மகா தீப மை பிரசாதம் தயாரிக்கப்பட்டது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட தீப மையை, பக்தர்களுக்கு விநியோகம் செய்ய பொட்டலாமாக்கும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். மற்ற பக்தர்கள் கட்டணம் செலுத்தி, கோயில் நிர்வாகத்திடமிருந்து தீப மை பெற்றுக் கொள்ளலாம்.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டை ஆளக்கூடிய திறமை ஸ்டாலினுக்கு இல்லை' - அமைச்சர் கே.பி அன்பழகன் பேச்சு!