திருவண்ணாமலை:அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு ஏழாம் நாளான இன்று (நவ. 23) அண்ணாமலையார் தேர் ஊர்வலம் லட்சக்கணக்கான பக்தர்களுடன் தொடங்கப்பட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 17ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ஆம் நாளான இன்று (நவ.23) பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் காலை 7:45 மணியளவில் நடைபெற்றது. விநாயகர் தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு மாட வீதியில் வலம் வந்து, நிலையை அடைந்த பின்பு முருகர் தேரானது வடம் பிடித்து இழுக்கப்பட்டு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து நிலையை அடைந்தது.
அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்ற மகாரத தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. இந்தத் தேரோட்டத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆகியோர் வடத்தைப் பிடித்து தேரினை இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி கோஷங்களை முழக்கமிட்டு தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து மாட வீதிகளில் வலம் வந்தனர்.