திருவண்ணாமலை: மாசி மகத் தினத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாற்றில் உள்ள கவுதம நதிக்கரையில், அண்ணாமலையாரை மகனாக பாவித்த வல்லாள மகாராஜாவுக்கு, அண்ணாமலையார் தீர்த்தவாரி செய்து, திதி கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கவுதம நதிக்கரையில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கும் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
சிவன் மகன் ஆன கதை: திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா, அண்ணாமலையாரின் தீவிர பக்தர். இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் குழந்தை வரம் வேண்டி அண்ணாமலையாரிடம் நின்றபோது, தானே குழந்தையாக இந்தப் பிறவியில் தங்களுக்கு இருப்பேன் என்று தெரிவித்ததாக வரலாறு. வல்லாள மகாராஜா தனது குடும்பத்தாருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் தைப்பூச தீர்த்தவாரி தினத்தன்று அண்டை நாட்டின் மீது படை எடுத்துச்செல்லும்போது வல்லாள மகாராஜா இறந்ததாக அண்ணாமலையாருக்குத் தகவல் சென்றது. அதன்பேரில் ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி மேற்கொண்ட அண்ணாமலையார் மேளதாளம் இல்லாமல் கோயிலுக்கு திரும்பி வந்ததாக ஐதீகம்.
அதைத்தொடர்ந்து 30ம் நாளான மாசி மாதம், மகம் நட்சத்திரத்தில் திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாற்றில் உள்ள கவுதம நதிக்கரையில் வல்லாள மகாராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுப்பது வழக்கம். 99-வது ஆண்டாக இந்த ஆண்டு மாசி மாதம், மகம் நட்சத்திரமான இன்று அண்ணாமலையார் வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுக்க வந்தார். அப்போது, வழிநெடுக பக்தர்களுக்கு அருளாசி தந்த அண்ணாமலையார், தனது தந்தையாக பாவித்த வல்லாள மகாராஜாவுக்கு கவுதம நதிக்கரையில் தீர்த்தவாரி செய்து திதி கொடுத்தார்.