திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கோட்டை வடக்கு தெருவில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தையில், படவேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கடை நடத்தி வருகின்றனர். அப்பகுதி விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
இங்கு தினந்தோறும் ஆரணி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் செல்வது வழக்கம். குறிப்பாக, வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வந்து, தங்களுக்குத் தேவையாக காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் செல்வர்.
இந்த நிலையில், மார்கழி மாதம் மற்றும் பொங்கல் பண்டிகைக் காலம் துவங்கியதால், வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் விறுவிறுப்பான வியாபாரம் நடைபெறுகிறது. குறிப்பாக மஞ்சள், வாழை இலை, மொச்சகொட்டை, கரும்பு, பூசணிக்காய் உள்ளிட்டவைகள் சுமார் 32 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாக விற்பனை நடைபெற்றுள்ளதாக வேளாண்மை உதவி அலுவலர் நந்தகோபால் கூறினார்.
இதனையடுத்து, விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆகியோர் உழவர் சந்தை வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு பொங்கலைக் கொண்டாடினர். இதில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:இந்த பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறப் போகும் ஆண்டு.. வீடியோ மூலம் முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து!