எட்டு வழிச்சாலை சட்டமும் விவசாயிகளாகிய நாம் எதிர்கொள்ளும் சவால்களும் என்கின்ற தலைப்பில் திருவண்ணாமலையில் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
'மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி இந்த ஐந்து மாவட்டங்களில் மிகக் கொடூரமான அடக்குமுறை கட்டவிழ்த்து விட்டார்கள். அதையெல்லாம் மீறி இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது.
இப்போது அரசின் அரசாணை பொருத்தமற்றது எனக்கூறி நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதனடிப்படையில் அந்தத் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும். மீண்டும் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அரசு செயல்படும் என்று சொன்னால் இந்த மாவட்டங்களில் மீண்டும் விவசாயிகள் தன்னெழுச்சியான போராட்டத்தை நடத்துவார்கள். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.
தமிழ்நாட்டில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று இருக்கிறது. தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடைந்து விடும் என்கின்ற ஐயப்பாட்டில், இருக்கிற எண்ணிக்கையை வைத்து தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை நடத்துவதற்காக அதிமுகவில் இருக்கும் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களை நீக்குவதற்கான நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொண்டிருக்கிறார்.
மேலும் இரண்டு பேரை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று சொன்னால் அதற்கான சட்டத்தின் வரைமுறை இருக்கிறது. சட்டப்பேரவையிலேயே அந்த கட்சியினுடைய கொறடா உத்தரவை மீறும்போதுதான் அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமே தவிர சட்டப்பேரவைக்கு வெளியே அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது பற்றி சபாநாயகர் தலையிடமுடியாது என்பதால் தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் அவருக்கு கிடையாது' என தெரிவித்தார்.