திருவண்ணாமலை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திறப்பு விழாவாக நடத்தப்பட்டு பல பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரது பார்வைக்கும் வைக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மே 11-ஆம் தேதி திருவண்ணாமலை காந்திநகர் புறவழிச்சாலையில் உள்ள மைதானத்தில் 'தமிழக முதல்வர் வாழ்க்கை வரலாறு' குறித்த புகைப்பட கண்காட்சியின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் அனைத்து புகைப்படங்களையும் கண்டு ரசித்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெயம் ரவி, "இது போன்ற புகைப்பட கண்காட்சியை சிறப்பாக கொண்டு வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இது போன்ற புகைப்பட கண்காட்சியை எங்கும் பார்த்ததில்லை என்றும், சினிமாவில் இருப்பது போன்று இங்கு பெரிய சகாப்தத்தை கண் முன் நிறுத்தியதாக ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழக முதலமைச்சரின் சாதனைகளையும், உழைப்பையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதாக உணர்வதாகவும், தமிழக முதலமைச்சர் எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் அனைவருடனும் எப்படி பழகுகிறாரோ, அதேபோன்று இந்த புகைப்பட கண்காட்சி அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.