தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதிச் சான்றிதழ் இல்லாததால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவி தற்கொலை முயற்சி! - committed suicide

சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரி படிப்பைத் தொடர இயலாத பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாதிச் சான்று வழங்க பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 19, 2023, 6:30 AM IST

சாதிச் சான்றிதழ் இல்லாததால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவி தற்கொலை முயற்சி!

திருவண்ணாமலை: சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரி படிப்பைத் தொடர இயலாத பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவி தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை, திருக்கோவிலூர் சாலை, எடப்பாளையம் கிராமம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 30 குடும்பங்களைச் சேர்ந்த 80 நபர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரதானத் தொழில் பன்றி வளர்ப்பாக இருந்து வருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்துவதற்கும் முதன்மைத் தொழிலாக பன்றியினை வளர்த்து, அதனை விற்பனை செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் எடப்பாளையத்தில் மாணவி ஒருவர் நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 375 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து மேற்படிப்பிற்காக கல்லூரியில் பயில திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி உள்ளிட்டப் பல்வேறு கல்லூரிகளில் சேர மாணவி ராஜேஸ்வரி முயற்சித்துள்ளார்.

ஆனால், அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் விண்ணப்பத்திற்கு அத்தியாவசியச் சான்றாக மாணவியிடம் சாதிச் சான்றிதழ் கேட்டு உள்ளனர். பன்றி வியாபாரம் செய்யும் மக்கள் பன்னியாண்டி என்ற சாதிச் சான்றிதழ் இல்லாததால் மாணவியால் எந்த கல்லூரியிலும் சேர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தன்னுடன் படித்த சக மாணவிகள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்ததால் அவர் மட்டும் கல்லூரியில் சேர இயலாததால், மனமுடைந்த மாணவி நேற்று காலை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். மேலும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெற்றோர்களுக்குத் தெரிய வர, நேற்று நண்பகல் மாணவியை உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பன்னியாண்டி என்ற சாதிச் சான்று இல்லாததால் மாணவி மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார் எனவும், 12ம் வகுப்பிற்கு மேல் தங்களது பிள்ளைகள் மேல் படிப்பைத் தொடர இயலாமல் இருந்து வருவதாகவும், கிராம அலுவலகம் முதல் அரசு மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் வரை பலமுறை புகார் அளித்தும் தாங்கள் அளிக்கும் புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் பெற்றோர் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

மேலும், பன்னியாண்டி என்ற சாதிச் சான்றிதழ் இல்லாததால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், அவர்களின் எதிர்காலம் இதனால் பாதிப்படைகின்றது என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உடனடியாக தமிழக அரசு தங்களுக்கும் தங்களது பிள்ளைகளுக்கும் பன்னியாண்டி என்ற சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:Sivaji Krishnamurthy: குஷ்புவுக்கு எதிராக அவதூறு பேச்சு: திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது!

ABOUT THE AUTHOR

...view details