திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கஸ்தம்பாடி கிராமத்தில் ஏழுமலை - செல்வராணி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகனான சாமராஜ் (21), சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அதேபோல் இதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் - அஞ்சலை தம்பதியினரின் மூத்த மகள் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சாம்ராஜும் அந்த மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. அப்போது மாணவியின் தரப்பில் காதலுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதோடு மாணவியை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாம்ராஜ் உடனான உறவை துண்டித்த மாணவி, பேச்சுவார்த்தையையும் நிறுத்தி உள்ளார். இந்த நிலையில் சாம்ராஜ், தனது நண்பர்களான முகேஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோருடன் மாணவியின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளனர்.
அப்போது, “உன்னிடம் பேச விரும்பவில்லை. எனது உறவினரான விஜய் என்பவரை நான் திருமணம் செய்து கொள்ள உள்ளேன்” என மாணவி தெரிவித்துள்ளார். இதனால் மாணவிக்கும் சாம்ராஜூக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை வெங்கடேசன், சாம்ராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.