திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் கூலி வேலை செய்துவரும் இவர், சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஏழுமலை என்பவரிடம் 4 சென்ட் நிலம் வாங்கியுள்ளார்.
சுரேஷ் அப்பகுதியில் வீடு கட்ட பணி மேற்கொள்ள முயன்றபோது, அவர் வாங்கிய இடத்தில் 3 சென்ட் இடம் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் இது குறித்து ஏழுமலையிடம் கேட்டபோது, ஏழுமலை இதற்கு முறையான பதில் தெரிவிக்காமல் அலைக்கழித்துள்ளார்.
மேலும் இது குறித்து அலுவலர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் மனவேதனை அடைந்த சுரேஷ், தனது மனைவி, இரண்டு மகன்களுடன் இன்று (மார்ச் 1) திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற கூலித்தொழிலாளி அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு எதிராகக் களமிறங்கும் திமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர்!