தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

427 மலை கிராமங்களுக்கு 9 வயது சிறுவன் நாட்டாமை! - 9 year old boy

427 மலை கிராமங்களுக்கு ஜவ்வாது மலையைச் சேர்ந்த 9 வயது சிறுவன் நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

427 மலை கிராமங்களுக்கு 9வயது சிறுவன் நாட்டாமை
427 மலை கிராமங்களுக்கு 9வயது சிறுவன் நாட்டாமை

By

Published : Aug 9, 2021, 6:12 AM IST

திருவண்ணாமலை:ஜவ்வாதுமலை கிராமம் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் ஜவ்வாது மலை கிராமம் உள்பட மொத்தம் 427 மலை கிராமங்கள் உள்ளன.

இந்த மலை கிராமங்களுக்கு ஒரு தலைமை நாட்டாமை இருப்பார். இவருக்குக் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நாட்டாமை, ஊர் கவுண்டர், மூப்பன் ஆகிய மூவர் செயல்படுவர். அவர்கள் தங்கள் கிராமத்தில் ஏற்படும் தகராறு, பிரச்னைகளை தலைமை நாட்டாமையிடம் தெரிவிப்பர். பின்னர் தலைமை நாட்டாமை தலைமையில் பஞ்சாயத்து நடத்தப்பட்டு தீர்வு காணப்படும். மலைவாழ் மக்களை பொறுத்தவரை இன்றுவரையிலும் நாட்டாமை தீர்ப்பிற்கு மதிப்பளித்து வருகின்றனர்.

427 மலை கிராமங்களுக்கு 9 வயது சிறுவன் நாட்டாமை

நாட்டாமை தீர்ப்பு

மலை கிராமங்களில் ஊர் திருவிழாக்களை தலைமை நாட்டாமைதான் முடிவு செய்வார். அதேபோல் திருமணம் என்றால் 427 மலை கிராமங்களின் நாட்டாமை முன்னிலையில் மணமகன், மணமகளின் விவரம் தெரிவிக்கப்பட்டு, தலைமை நாட்டாமை தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்திவைப்பது வழக்கம்.

ஜவ்வாது மலை வாழ் மக்களின் வாழ்வில் தலைமை நாட்டாமை என்பது ஒரு முக்கிய பொறுப்பாகும். அவர்கள் உத்தரவுப்படியே மலைவாழ் மக்கள் இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர்.

இன்றளவும் பாரம்பரியம்

ஜவ்வாது மலை கிராமங்களுக்கு தலைமை நாட்டாமையாக இருந்து வந்த மல்லிமடு கிராமத்தைச் சேர்ந்த 87 வயதான சின்னாண்டி கடந்த ஆண்டு உயிரிழந்தார். இவர் 80 ஆண்டுகளாக தலைமை நாட்டாமை பதவி வகித்தவர்.

இந்நிலையில் மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த 36 ஊர் நாட்டாமைகள், 36 ஊர்க்கவுண்டர், 36 மூப்பன் ஆகியோர் ஒன்றிணைந்து மலைவாழ் மக்களின் நம்பிக்கைப்படி உயிரிழந்த சின்னாண்டியிடம் குறி கேட்டு அடுத்த தலைமை நாட்டாமையை தேர்வு செய்யும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி கடந்த மாதம் நடந்தது.

சிறுவனுக்கு செங்கோல்

இந்தக் குறி கேட்பின்போது தலைமை நாட்டாமையான சின்னாண்டியின் இரண்டாவது மகன் முத்துசாமியின் ஒன்பது வயதான சிறுவன் சக்திவேல் அடுத்த தலைமை நாட்டாமையாக நியாமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்ற ஊர் மக்கள் 9 வயதான சிறுவன் சக்திவேலுக்கு அவரின் சொந்த ஊரான மல்லிமடு கிராமத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி தலைமை நாட்டாமை பட்டம் சூட்டி மலைவாழ் மக்களின் தலைமை நாட்டாமை தேர்வு செய்து செங்கோல் அளித்தனர்.

தலைமை நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்ட சக்திவேல், நாவலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலை வாழ் மக்கள் முறை

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், " மலைவாழ் மக்களின் கலாசாரத்தை பொறுத்தவரையில் காலம் காலமாக தலைமை நாட்டாமை சொல்படிதான் கிராம மக்கள் செயல்பட்டு வருகிறோம். நாட்டாமை உத்தரவை மீறி யாரும் செயல்பட்டது கிடையாது. எங்கள் கிராமத்தில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் பஞ்சாயத்து மூலமாகத்தான் தீர்வு காணப்படும். அனைவரும் தலைமை நாட்டாமை தீர்ப்புக்கு அடிபணிந்து செயல்படுவார்கள்.

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமை நாட்டாமை ஒன்பது வயது சிறுவன் என்றாலும் அவரது உத்தரவுக்கு கீழ்ப்படிந்து தான் மலைகிராம மக்கள் செயல்படுவோம். தலைமை நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்டுள்ள சக்திவேல் சிறுவன் என்பதால் சிறுவன் தீர்ப்பு கூறும் வயது வரும் வரை அவருக்கு துணையாக அவரது தந்தை இணைந்து செயல்படுவார்" எனத் தெரிவித்தனர்.

தாத்தா வழி நின்று பணி

தலைமை நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்ட 9 வயது சிறுவன் சக்திவேல் கூறுகையில், தனது தாத்தாவின் வழியில் நின்று அவர் எவ்வாறு பணியாற்றினாரோ அதேபோல் பெரியவர்கள் அறிவுரையை ஏற்று சிறப்பாக செயல்படுவேன் எனத் தெரிவித்தார்.

காலம் மாறினாலும் இன்றுவரை பாரம்பரியம் மாறாமல் மலைகிராம மக்கள் பஞ்சாயத்து முறையைக் கடைபிடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆயிரம் ஆண்டு பழமையான சப்தமாதர்கள் சிற்ப தொகுப்பு கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details