தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பெருட்களுக்கான கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே வலசை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான காவலர்கள் நேற்று (மே.12) அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வலசை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 கிலோ வெல்லம் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள், 4 இருசக்கர வாகனங்களையும், விற்பனைக்காக லாரி டியூப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். பின் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.