திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே நேற்று (மே 15) இரவு சாராயம் தொடர்பாக காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணமங்கலம் படவேடு சாலையில் உள்ள குப்பம் என்ற கிராமத்தில் 4 பேர் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்துள்ளனர்.
இதனால், காவலர் அன்பழகன், ரகளையில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தாமல் வீட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதன் காரணமாக காவலருக்கும், எதிர் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் 4 பேர் சேர்ந்து, காவலர் அன்பழகனை சராமரியாக தாக்கி உள்ளனர்.
பின்னர், இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற துணை காவல் ஆய்வாளர் கார்த்தி, ரகளையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து, கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.