திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 186 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக 39 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது. இதில் 81 பேர் நோய்த் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மும்பையில் இருந்து வந்தவர்கள் 30 பேர், சென்னையில் இருந்து வந்தவர்கள் 5 பேர், எஞ்சிய 4 பேர் மாவட்டத்திலேயே வசிப்பவர்கள் ஆவர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாவட்டத்தின் பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, மும்பையில் இருந்து வந்த பெண்மணியும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்பதால், பண்டிதப்பட்டு கிராம ஊராட்சி சார்பில் துப்புரவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், டேங்க் ஆப்பரேட்டர்களைக் கொண்டு அனைத்து வீதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.