திருவண்ணாமலை: நேற்று(செப்-19) மாலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர் கி.கார்த்திகேயன், மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் திடீரென திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இச்சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாத சுமார் 25க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், "18 வயதுக்கு குறைவான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு வாகனத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தார்.
ஒரு நாளில் மட்டும் 18 வயதுக்கு குறைவாக இரு சக்கர வாகனங்களை ஓட்டிய 45 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டியவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் அமர்ந்து சென்றவர்கள் என 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஐந்து இருசக்கர ரோந்து வாகனம் செயல்பட்டு வருகிறது. மேலும் மூன்று வாகனங்கள் அதிகரிக்கப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு குற்றங்கள் தடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இறுதி யுத்தத்திற்கு டெல்லி செல்லும் ஈபிஎஸ்..! கலக்கத்தில் ஓபிஎஸ்..! மத்தியில் ஆதரவு யாருக்கு?