திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன். இவர் நெல் அறுவடை இயந்திரம் வைத்துள்ளார். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில், முதல் மகள் கோமதி கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் குமுதா பிளஸ்2 படித்து வருகிறார். மூன்றாவது மகள் மீனா 10 ஆம் வகுப்பும், கடைசி மகள் துர்கா 7ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இவர்களின் 3ஆவது மகள் மீனா தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி விடுமுறையில் இருந்து வருகிறார். மீனா பாடம் பயிலும் நேரம்போக மீதமுள்ள நேரங்களில் தனது பெற்றோருக்கு உதவியாக விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தில் ஏர் ஓட்டுவது, நாற்று நடுவது, களை எடுப்பது, அண்டை வெட்டுவது என அனைத்து விவசாய பணிகளையும் ஆர்வத்துடன் செய்து வருகிறார்.
அறுவடை காலம் என்பதால் மீனாவின் தந்தை ஓய்வில்லாமல் நெல் அறுவடை இயந்திரம் இயக்கி வருகிறார். இதனைக் கண்ட மீனா தனது தந்தைக்கு உதவியாக இருக்க வேண்டும் என எண்ணி தமக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த மூன்று ஏக்கர் நிலத்தில் அறுவடை இயந்திரத்தை இயக்கி முழுவதையும் அறுவடை செய்து அசத்தியுள்ளார்.