திருவண்ணாமலை:தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள பரிசுப் பொருளை எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினர் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எட்டுத் தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்புக் குழுவினர், செலவினப் பார்வையாளர் குழு போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்படும் பொருள்களை பறிமுதல் செய்து, அவற்றை அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அல்லது பணத்தை திரும்பப் பெற, சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் அவற்றை ஆய்வு செய்த பின்னர், அவர்களிடம் மீண்டும் பொருள்களையும், பணத்தையும் ஒப்படைத்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் 1.05 கோடி பறிமுதல் இதுகுறித்து பேசிய அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், இதுவரை உரிய ஆவணங்களை சமர்பித்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன" என்றார்.
இந்தக் கண்காணிப்புப் பணிகளில் அதிக அளவு விவசாயிகள் மற்றும் வணிகர்களே பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணம் அல்லது பொருட்களை திரும்பப் பெறுவது சிரமமாக இருப்பதாகவும், இந்நடைமுறையை எளிமையாக்க அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுமே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.