திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை அடுத்த பாடியநல்லூர், சென்னை கொல்கத்தா சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் சென்னை கொத்தவால் சாவடி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்பரசன் தலைமையில் காவல்துறையினர் நேற்று (ஜூலை 23) இரவு 10 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த இருச்சக்கர வாகனத்தை மடக்கி விசாரணை செய்தனர். அந்த வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணனான தகவலை கொடுத்தனர். அதன்பேரில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களின் பைகளை சோதனை செய்ததில் அதில் 450 கிராம் கஞ்சா, 225 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் இரண்டு பேரையும் செங்குன்றம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர்கள் சென்னை கோவிலம்பாக்கம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அஸ்வின் (22), சென்னை மேற்கு வேளச்சேரி பிரதான சாலை அஷ்டலட்சுமி தெருவைச் சேர்ந்த ஜானகிராமன் (24) என்பது தெரியவந்தது.
இவர்களிடம் விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், இருச்சக்கர வாகனத்தையும் கஞ்சா, போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்து அடுத்தக்கட்ட விசாரணையை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...கஞ்சா போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது