தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலிக்கு அரிவாள் வெட்டு.. 2 குழந்தைகள் கொலை; திருமணம் மீறிய உறவால் விபரீதம்! - விசாரணை

திருவள்ளூர் அருகே திருமணம் மீறிய உறவால், காதலியை வெட்டியதுடன், அவரது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை
கொலை

By

Published : Feb 9, 2023, 8:05 AM IST

Updated : Feb 9, 2023, 1:29 PM IST

திருவள்ளூர்:சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில், பீகாரைச் சேர்ந்த குட்டுலு (25) என்ற இளைஞர் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி, அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இவருடன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த துவர்க்கா பார் என்பவர் தமது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இரவு பணி முடித்து வீட்டிற்கு வந்த துவர்க்கா பார் தமது மனைவி, குழந்தைகள் காணாமல் போனதை கண்டு அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது, அவரது மனைவி குட்டுலு வீட்டிற்குச் சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்து, துவர்க்கா பார் குட்டுலுவின் வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறார்.

வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்திருக்கிறார். அப்போது தன்னுடைய இரண்டு குழந்தைகளும் வாயில் டேப் ஒட்டப்பட்டு இறந்த நிலையிலும், மனைவி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்திலும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சோழவரம் போலீசார், மயங்கிய நிலையில் இருந்த துவர்க்கா பாரின் மனைவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தலை, கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இருந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவ இடத்தில் செங்குன்றம் துணை ஆணையர் மணிவண்ணன் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம்பெண்ணின் கணவன் துவர்க்கா பாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஒரே தொழிற்சாலையில் வேலைபார்த்து வருவதால், குட்டுலு அடிக்கடி துவர்க்கா பார் வீட்டுக்கு வருவதாகவும், அப்போது, திருமணமாகாத குட்டுலுவுக்கும், துவர்க்கா பார் மனைவிக்கும் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும் கடந்த 7ஆம் தேதி அன்று குழந்தைகளுடன் குட்டுலு வீட்டிற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் குட்டுலு குழந்தைகளின் வாயில் டேப் ஒட்டி, தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். தொடர்ந்து பெண்ணையும் அரிவாளால் தலையிலும், கழுத்திலும் வெட்டிவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய பீகாரைச் சேர்ந்த குட்டுலு என்ற இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணமான முன்னாள் காதலியை கடத்திய பாஜக பிரமுகர் - சினிமா பாணியில் சம்பவம்!

Last Updated : Feb 9, 2023, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details