திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மஞ்சு (38). இவர்களுக்கு சுவாதி (11), ஆயிஷா (9) என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் நாகராஜ் இறந்துவிட்ட நிலையில், புட்லூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத சித்தார்த் (38) என்பவர் மஞ்சுவுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்திற்கு மீறிய உறவில் வசித்து வந்தார்.
இந்நிலையில், பத்தியால்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஏகாம்பரம், என்ஜிஓ காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கோவிந்தன் ஆகியோர் அரசு நியாயவிலைக் கடை, மின் வாரியம் ஆகியவற்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சித்தார்த், மஞ்சுவிடம் தலா ஒரு லட்சம் வாங்கியுள்ளனர். அவர்கள் இதுவரை வேலை பெற்றுத்தர விலை என கூறப்படுகின்றது. ஆனால் வேலை பெற்றுத் தராததுடன் பணத்தையும் தராமல் ஏமாற்றியதால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான சித்தார்த், வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றித் தீக்குளித்தார்.
இதைக்கண்ட மஞ்சு அவரை காப்பாற்ற முயன்றதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சித்தார்த்தும் அவரைத் தொடர்ந்து மஞ்சுவும் இறந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.