திருவள்ளூர்: திருத்தணி தாலுகா பூனிமாங்காடு கிராமத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் சாலையில் பூனிமாங்காடு ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் அதிவேகமாக அந்த பகுதி சாலையை கடந்து சென்றுள்ளனர். பொறுமையாக செல்ல கூறி 100 நாள் பணியில் ஈடுபட்ட பெண்கள் கூறியுள்ளனர். விபத்து ஏற்படும் என்று இவர்கள் எச்சரிக்கையாக விடுத்ததை ஏற்காத இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த கிருஷ்ணன் என்பவர் இந்த இளைஞர்களை தட்டி கேட்க முன்வந்துள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் அவர்கள் வைத்திருந்த மூன்று பட்டாக்கத்திகளை காட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வருவதற்குள் அந்த பகுதியில் இருந்து கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள், மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி மரத்தில் மோதி கீழே விழுந்துள்ளனர். அவர்களை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.
இதைப் பார்த்தவுடன் மூன்று இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். கஞ்சா போதையில் இருக்கும் மூன்று இளைஞர்களால் எங்கள் பகுதி மக்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம். ஆகையால் மூன்று இளைஞர்களையும் கைது செய்ய வேண்டும் என்று, அவர்கள் விட்டுச் சென்ற அந்த பட்டாகத்தியை மாநில நெடுஞ்சாலையில் வைத்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதையும் படிங்க:திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் காவலர் தற்கொலை - போலீசார் விசாரணை!