திருவள்ளூர் மாவட்டம் புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக். இவர், வீடு வீடாகச் சென்று காய்கறி விற்பனை செய்வதற்காக குட்டி யானை வாகனத்தில் இன்று புறப்பட்டார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அசோக்கை கத்தியால் சரமாரியாக தாக்கினர். ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்த அசோக்கை, அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
ஆனால், கழுத்தில் சரமாரியாக வெட்டப்பட்டு இருந்ததால் சிகிச்சை பலனின்றி அசோக் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி கங்காதரன் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.