திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி - அரக்கோணம் சாலையில் இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்ட முயன்றனர். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய அந்த இளைஞர் நீதிமன்றம் அருகே இருந்த தனியார் உணவகத்திற்குள் நுழைந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த அந்த நான்கு பேரும் தனியார் உணவகத்திற்குள் வைத்து வாடிக்கையாளர்கள் முன்பு இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். உணவகத்தில் இருந்தவர்கள் இதனைப் பார்த்து பீதியடைந்து அங்கிருந்து ஓடினர்.
சிசிடிவியில் பதிவான ஈவு இரக்கமற்ற கொலை... திக் திக் நிமிடங்கள்! - cctv camera
திருவள்ளூர்: திருத்தணி அருகே உள்ள தனியார் உணவகத்திற்குள் வைத்து இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொல்லும் காட்சி அந்த உணவகத்தில் உள்ள கண்காணிப்பு படக்கருவியில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன்பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கண்காணிப்பு படக்கருவி காட்சிகளை அடிப்படையாக வைத்து அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் தனியார் உணவகத்தில் நுழைந்து பொதுமக்கள் முன்பே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.