திருவள்ளூர் எளாவூர் பஜார் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (45), தனது உறவினர் லோகேஷ் (25) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சுண்ணாம்பு குளத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது, சாலையைக் கடக்க முயன்ற லோகேஷின் வாகனம் மீது, அதிவேகமாக வந்த லாரி மோதியது.
இதில், தனலட்சுமி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை செலுத்திய லோகேஷ் நல்வாய்ப்பாக சிறு காயங்கள் இல்லாமல் உயிர் தப்பினார்.
விபத்து நடந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகியும் அமரர் ஊர்தி வர தாமதமானதால், சம்பவ இடமான கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் அதிகமாகக் கூடும் முக்கிய இணைப்புகளில் போக்குவரத்து காவலர்கள் இல்லாததே இதுபோன்ற கோர விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.