சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மாலாத்துரைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் கைக்குழந்தைகளுடன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “எனது கணவர் ஜோதி என்பவர் சூப்பர் மார்க்கெட் மற்றும் தீபாவளி ஃபண்டு நடத்தி வருகிறார். எங்களுக்கு திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகினார்.
அவர் எங்களது தொழிலை மேம்படுத்தித் தருவதாக ஆசை வார்த்தை கூறி எனது கணவரிடம் 8 கோடியே 25 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். இதனை திரும்ப கேட்டபோது நீண்ட நாள்களாக அலைக்கழித்து ஏமாற்றி, மிரட்டி வந்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி சோழவரம் காந்திநகரில் உள்ள அவரது செல்ஃபோன் கடையில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி கூறியிருந்தார்.
அதனை நம்பி எனது கணவர் ஜோதி, உறவினர்கள் அங்கு சென்றபோது அங்கு இருந்த சத்தியமூர்த்தியின் அடியாள்கள் உதயகுமார் உள்பட 10க்கும் மேற்பட்டோர் எனது கணவர் ஜோதியை அடித்து அவர் அணிந்திருந்த 22 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டனர். இதற்கான வீடியோ காட்சிகள் எங்களிடம் உள்ளது.