திருவள்ளூரில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் திருவள்ளூரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு முதல் விடிய விடிய சிறப்புப் பிரார்த்தனை, திருப்பலி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களிலும், கிறிஸ்துவர் வீடுகளிலும் கடந்த ஒரு வாரமாக பலர் குழந்தை ஏசுவின் பிறப்பை நினைவுபடுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்தும் பிரார்த்தனை செய்தும் வந்தனர்.
திருவள்ளூர் மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஏ.ஜி. தேவாலயத்தில், ஜெபகோபுரம் செல்லத்துரை பேசுகையில், ’பெத்லகேம் நகரின் மாட்டுத் தொழுவத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறந்தார். அவர் எதற்காக பிறந்தார் என்றால் ஏழை எளியவர்களுக்கு நாம் இரக்கம் காட்ட வேண்டும். பசியாக இருக்கிறவர்களுக்கு ஆகாரம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுப்பதுதான் கிறிஸ்துமஸ்’ என்று வாழ்த்து செய்தி தெரிவித்தார்.
தொடர்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை சபை மக்களிடம் தெரிவித்தார் மற்றும் இசிஐ, பெந்தகொஸ்த் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஜே.என்.சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சலோசியர் தேவாலயத்தில், நேற்று இரவு(டிச.24) முதல் விடிய, விடிய சிறப்பு பிரார்த்தனை மற்றும் பிரசங்கம் நடைபெற்றது.
மேலும், பல தேவாலயங்களில் ஏசுபோல் வேடமணிந்து ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்தும் காட்டினர். இவ்விழாவையொட்டி, மரியாவின் மடியில் குழந்தை ஏசு இருப்பதுபோல் குடில்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன. அதனையடுத்து ஏசு கிறிஸ்து சிறப்புப் பாடல்கள் பாடப்பட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர், பேரம்பாக்கம், பூந்தமல்லி, பொன்னேரி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்படப் பல பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர், நண்பர்களுக்கு இனிப்பு மற்றும் கேக்குகளை அளித்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி; வெயிலில் காக்க வைக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள்