கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவின் படி திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது, கோயில்கள் திறக்கக்கூடாது, கோயில்களில் திருமணம் நடத்தக்கூடாது, அதையும் மீறி திருமணம் நடைபெற வேண்டுமென்றால், முன் அனுமதி பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், இந்த உத்தரவை காற்றில் பறக்க வைத்தது திருவள்ளூர் மாவட்டம். இம்மாவட்டத்தில் திருத்தணி முருகன் கோயில் பின்புறத்தில் உள்ள விநாயகர் கோயிலில் இன்று அதிகாலை திருமணம் நடந்தது. அதன்பின் புதுமண தம்பதியினர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் கோயிலை வலம் வந்து வணங்கினர். மலைக்கோயிலில் காவல்துறை அலுவலர்கள், உதவி ஆய்வாளர் சேகர் தலைமையில் காவல்துறையினர் இருந்தும் ஏன் தடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.
இதேபோல் திருத்தணி கீழ் பஜார் செல்லும் சாலையில் உள்ள விநாயகர் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. மேலும் கோயில் திறந்து திருமணம் நடைபெற்றதால் அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல பிரபலமான முருகன் கோயில் மலைக்கோயில் வளாகத்தில் திருமணம் நடைபெற்றதோடு, கோயிலை சுற்றி வலம் வந்தவர்களை காவல்துறையினர் தடுக்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது