திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது, தோக்கமூர் கிராமம். மாம்பழம் விளைச்சலையும், சிறுதானிய விளைச்சலையும் நம்பி வாழும் இந்த கிராமத்தில் 100 பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தோக்கமூர் கிராமத்திற்கும் அருகில் இருக்கும் எளார்மேடு, எடகண்டிகை என மூன்று ஊர்களுக்கும் பொதுவானதாக அருகில் திரௌபதியம்மன் கோயிலும், கோயிலைச்சார்ந்த 2.94 ஏக்கர் அரசு நிலமும் உள்ளது.
அக்கிராம மக்கள் அந்நிலங்களை கால்நடைகள் மேய்க்க, பருவ காலங்களில் விவசாயம் செய்ய மற்றும் கோயில் திருவிழா சமயங்களின் போதும் அந்நிலங்களை உபயோகித்து வந்தனர். மேலும், அருகிலுள்ள வி.ஏ.ஓ அலுவலகம், அங்கன்வாடி மையம், அரசு பள்ளி மற்றும் நியாய விலைக்கடை உள்பட பல்வேறு தேவைகளுக்கு இந்த அரசு நிலத்தையே நடைபாதையாகவும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஓர் ஆண்டுக்கு முன் அந்நிலத்தில் சிலரால் சிமென்ட் கற்களால் ஆன முள்வேலி அமைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், முள்வேலியை உடனடியாக அகற்றுமாறு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
காவல் துறை நடவடிக்கை எடுக்க தாமதமானதால் இவ்விவகாரத்தை பல சமூக அமைப்புகளும், சாதிய அமைப்புகளும் கையில் எடுத்துள்ளனர். இவ்வாறு இருக்க, கடந்த ஏழு வாரங்களுக்கு முன்பு இந்நிலங்களை பட்டியலின மக்கள் பயன்படுத்தாத வகையில், அம்மக்களின் வீடுகளைச்சுற்றி 8 அடி உயரமும் 90 மீட்டர் நீளத்தில் தீண்டாமைச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
தீண்டாமைச்சுவரை அகற்றிய அலுவலர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற மறுப்பு - கிராம மக்கள் வாக்குவாதம் இதனால், செய்வதறியாது நின்ற அப்பட்டியலின மக்களுக்கு ஆதரவாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர், தீண்டாமை ஒழிப்பு நாளான அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள் தீண்டாமை சுவர் அகற்றப்படாவிட்டால் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக அறிக்கை வெளியிட்டனர்.
இதையடுத்து, கோட்டாட்சியர் காயத்ரி அறிவுறுத்தலின்படி, வட்டாட்சியர் கண்ணன் தலைமையில், டிஎஸ்பி கிரியா சக்தி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீண்டாமை சுவர் அகற்றப்பட்டது.
ஆனால், ஓர் ஆண்டுக்கு முன் அந்நிலத்தில் சிமென்ட் கற்கள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததை அலுவலர்கள் அகற்றவில்லை. அதை அகற்றக்கோரி கிராம மக்கள் வட்டாட்சியர் கண்ணனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:மனைவியின் அன்பான சவால், தோளில் சுமந்து மலையேறிய கணவன்