திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சார் பதிவாளர் அலுவலகம் காந்தி சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய அதிகப்பணம் லஞ்சமாக கேட்பதாகவும், அதுமட்டுமின்றி அனுமதி இல்லாத வீட்டுமனைகளைப் பதிவு செய்ய அதிக லஞ்சப் பணம் கேட்பதாகவும், இடைத்தரகர்கள் அதிக அளவு அலுவலகம் முன் குவிந்து பொதுமக்களிடம் பணம் கேட்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
மேலும், அனுமதி இல்லாத பத்திர எழுத்தர்கள், சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர்களுடன் தொடர் தொடர்பில் இருப்பதால் அதிகப்பணம் கேட்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்திருக்கின்றன. இத்தனை புகார்களையும் ஒருங்கிணைத்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி குமரவேல், 10-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், திருவள்ளூர் மாவட்ட தனிப்படை அலுவலர் கோட்டீஸ்வரன் தலைமையில் திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையை நள்ளிரவில் செய்தனர்.
திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளர் கவிதா, அலுவலகப் பணியாளர்கள் புருஷோத், சுரேஷ் ஆகியவர்கள் இடத்தில் நள்ளிரவு வரை ஏழு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மேலும் அலுவலகத்தில் இருந்த தற்காலிகப் பெண் பணியாளர்கள், ஆண் பணியாளர்கள் ஆகியோர் இடத்தில் கணக்கில் வராத ரூபாய் 50 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.